நான்பெற்ற இன்பம் பெறுகஇவ் வையகம்
வான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின்
ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரந்
தான்பற்றப் பற்றத் தலைப்படுந் தானே.
- திருமந்திரம் - திருமூலர் வரலாறு - கவி எண் 85.
நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று ஆசான் திருமூலர் சொன்னார். ஆசான் ஞானபண்டிதன் வேறல்ல, மகான் அருணகிரிநாதர் வேறல்ல, எல்லாம் ஒருவர்தான். நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் நான் அடைந்த இன்பத்தை இவ்வுலகம் அடைய வேண்டுமென்று சொன்னார்.
மறைபொருள் எது என்று கேட்டான்? அது, ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம் என்றார் ஆசான் திருமூலதேவர். நீங்களெல்லாம் இந்த உடம்பைப் பற்றி அறிய முடியவில்லை. நான் அறிந்தேன் என்றார். இந்த உடம்புக்குள்ளேயே சொர்க்கம் இருக்கிறது. ஊன் என்ற இரண்டு சுழி ‘ன்’ போட்டிருக்கும். உடம்பு என்று அர்த்தம். அது ஊன் பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்.
தான் பற்றப் பற்றத் தலைப்படுந் தானே என்றார். இப்ப நாங்களெல்லாம் அடைந்த இன்பம் எது? நீ பார்க்கக்கூடிய உடம்பை இதுநாள் வரை நீ நம்பியிருப்பாய், நம்பி போற்றி வருகிறாய். நாங்களும் போற்றி வருகிறோம். ஆனால் உன்னால் காப்பாற்ற முடியவில்லை. நரைதிரைக்கு உட்பட்டு, நோய்க்கும் பிரச்சனைக்கும் உட்பட்ட உடம்பாக இருக்கும். நாங்கள் என்ன செய்தோம்? உள்ளே ஒரு ஒளிச்சுடரை அறிந்து, நோய்க்கும், பிரச்சனைக்கும், பசிக்கும், பிணிக்கும் காரணமான உடம்பை நீக்கி, என்றும் அழியாத ஒளி உடம்பை நாங்கள் பெற்றிருக்கிறோம். இதை உங்களுக்கு சொல்கிறோம்.
நீங்களும் அறிந்து கொள்ளலாம். நீங்கள் என்ன செய்கிறீர்கள்? இதுபற்றி ஒன்றுமே அறியாமல், வெறும் ஆரவார பூஜை சடங்குகளில் மட்டும் ஈடுபடுகிறீர்கள். முதுபெரும் தலைவன் சொன்னார். உன்னால் அறிந்து கொள்ள முடியாது. உன்னுடைய அறிவு ஒரு எல்லைக்கு உட்பட்டது. எங்கள் அறிவு எல்லை கடந்தது. ஈரேழு பதினான்கு உலகமும் சென்று வரக்கூடிய வல்லமை உள்ள அறிவு நாங்கள் பெற்றிருக்கிறோம். அந்த அறிவு எல்லாம்வல்ல இயற்கை எங்களுக்கு கொடுத்திருக்கிறாள். தாய்தான் தந்திருக்கிறாள். ஆகவே நீங்களும் அதை அறிந்து கொள்ளுங்கள் என்றார். ஞானிகள் இதைத்தான் சொல்லியிருக்கிறார்கள்.
என்னவே நீயழைக்க எனக்குமுன்னே
எதிரேறி முன்வருவாள் ஆத்தாள்வாலை
சொன்னபேர் அறிந்துநன்றாய் அழைத்துப்பாரு
சூட்சமிதை உனக்காகச் சொன்னோமப்பா
இன்னபேர் இன்னகுறி யெண்ணவேண்டாம்
ஏகமாய் அறிந்திருப்போம் அப்போநாமும்
முன்னமே அழைக்கையிலே மூமூவென்றால்
முத்திதரும் வாலைபதஞ் சித்தியாமே.
- மகான் திருமூலர் ஞானம் 84ல் கவி எண் 82
சித்தர்கள் எல்லோரும் ஞானிகள். ஞானிகளில் இவர் உயர்ந்தவர், அவர் தாழ்ந்தவர் என்ற பேதமில்லை. எல்லா ஞானிகளும் மானுட தேகம் எடுத்து அதன் பயனை அறிந்து அதிலுள்ள மும்மல கசடை நீக்கி ஒளி உடம்பை பெற்றவர்கள். களிம்பாகிய மும்மலத்தை போக்காவிட்டால் ஞானியாக முடியாது. அவர்கள் பலகோடி யுகம் வாழும் வல்லமை பெற்றவர்கள். மனிதனாக பிறந்தால் மோட்ஷகதி அடைய வேண்டும். நம்மை தோற்றுவித்த வாலை அன்னை எப்பவும் இளமையாக இருக்கிறாள். நாம் பரிணாம வளர்ச்சிக்கு உட்பட்டு இறந்து விடுகிறோம். ஞானிகள் அருள் இல்லாமல் இயற்கை அன்னையை அறிய முடியாது. ஆசான் திருமூலதேவரை தியானித்து அழைக்கவேண்டும் இல்லாவிட்டால் ஒரு முற்றுப்பெற்ற ஞானியை ஆசானாக ஏற்று பூஜித்து ஆசி பெற வேண்டும்.
-அடிகளார் ஆறுமுக அரங்கமகாதேசிகர்
Aum Muruga ஓம் மு௫கா
ஓங்காரக்குடில் Ongarakudil
சித்தர் அறிவியல் Wisdom of Siththars
நீங்களும் வாசித்து அறிந்து கொள்ளுங்கள்.
https://twitter.com/Ongarakudil
Posted by Nathan Surya
No comments:
Post a Comment