Sunday, November 11, 2018

பகையை நீக்கிட முருகன் அருளாசி



முருகா என்றால் :
Aum Muruga ஓம் மு௫கா
பகைவனையும் நட்பாக்கிக் கொள்கின்ற பண்பைப் பெறலாம். அறம், பொருள், இன்பம், வீடுபேறு என்ற நான்கையும் அறிந்து தேர்ந்து கடைத்தேறிய ஞானிகளால் மட்டும்தான் பகைஉணர்வு இல்லாமல் இருக்க முடியும்.

சாதாரண மனிதன் வினைக்குற்றத்திற்கு உள்ளானவன். ஆதலின் அவனிடம் வினைக்குற்றத்தினால் பிறிதொருவர் மீது நட்பு ஏற்படுவதும் பிறிதொருவர் மீது பகை ஏற்படுவதும் இயல்பே.

அவரவர் முன் செய்திட்ட பாவபுண்ணியங்களுக்கு ஏற்பதான் நட்பும் பகையும் அமைகிறது. முன் செய்த பாவத்தின் காரணமாக பகை ஏற்பட்ட போதும், அதை பகையற்ற நட்பே வடிவான ஞானிகள் துணை கொண்டு தமக்குற்ற பகையை நட்பாக்கிக் கொள்ள வேண்டும். பகையை நீக்கி நட்பாக்கி கொள்ள வேண்டுமே அன்றி பகைமை பாராட்டி நரகத்தில் வீழலாகாது.

ஒருவன் தமக்கு முன்பு செய்த இடையூறுகளை அவ்வப்போது மறந்து விடல் வேண்டும். எப்படி காய்கறிகளில் உள்ள குற்றமான கோம்பை நீக்கி காயை சமைக்கிறோமோ அதுபோல அவரிடத்து உள்ள குற்றங்களை மறந்து நன்மைகளை மட்டும் எண்ணி ஏற்று பகையை மறத்தல் வேண்டும். ஏனெனில் பகை நமது வினையால் வந்த குற்றமாகும். பகை தாங்கி வருவது மட்டுமே மற்றொருவன் செயல். ஆதலின் தாங்குபவனை மறந்து தம்வினைக் குற்றம் என்று நினைத்து தாங்கி வந்தவனை நட்பாக்கிகொண்டு, மேல்வினை குற்றத்திலிருந்து தப்பித்துவிடல் வேண்டும்.

இவ்விதமாய் பகையை நீக்கிட அவர் தம்மிடம் மனம் விட்டு பேசியும் தாம் செய்திட்ட செயல்களை அவரிடத்து சொல்லி குற்றங்களை மன்னித்தும், பிறர் தமக்கு செய்த இடையூறுகளை தமது வினை என எண்ணி பொறுத்துக் கொண்டும் பகை கொள்வதிலிருந்து தப்பித்துக் கொள்ள வேண்டும். தூயமனம் பெற்றால்தான் இவை வரும். தூயமனம் பெற தூயவனாம் குருநாதன் வழிகாட்டல் அவசியமாம். ஞானகுருநாதன் சொற்குரு வழிகாட்டல்தனை குருமனம் மகிழ நடந்து பெற்று குருநாதர் தம்மிடம் மானசீகமாக பகை நீங்கிடவே விண்ணப்பித்து சொற்குரு உபதேச வழி நடந்து நடந்து பகை நீக்கிடல் வேண்டும்.

முருகன் அருள் கூடிட பகைதானே நீங்கும். முருகன் அருளைப் பெற்று பகை நீங்கி பகைமை பாராட்டாது உலகினர் அனைவரிடத்தும் நட்பு பாராட்டி நல்லோராய் வாழுங்கள். உலகில் உள்ள எழுநூறு கோடிக்கும் மேலான மக்களில் மனிதனாகிய நாம் நம்முடன் சார்ந்த ஒரு சிலரிடம் மட்டுமே நட்பாயும், பகையாயும் உள்ளோம். அனைவரிடத்தும் நாம் அவ்விதம் இல்லை. ஆதலின் நட்பும் பகையும் நமது முன் சென்ம தொடர்பினிலே வருகின்றது

ஆதலால் அவை முன்சென்ம வாசனையால் வந்திட்ட வினைக் குற்றங்களே என்று உணர்ந்திடல் வேண்டும். பகை திடீரென தோன்றுவதில்லை. பகை நட்பு கொண்டோர் தம்மிடம் உள்ள குறைகளை காண காண அந்த குறைகளை பெரிதாக எண்ணிட பகையாய் மாறுகிறது. நட்பிலிருந்துதான் பகை தோன்றுமே அன்றி வெளியிலிருந்து சம்பந்தமில்லாமல் வருவது இல்லை. ஆதலின் பிறர் தமக்கு செய்த இடையூறுகளை துன்பங்களை மறந்து அவர் செய்த நன்மைகளை சிறிதாயினும் கவனத்தில் கொண்டு அதன் பொருட்டு அவர் செய்த துன்பங்களை மன்னித்து ஏற்றுக் கொண்டு நட்பை வளர்த்தால் பகை என்ற பேச்சுக்கே அங்கே இடமில்லை.

பகையை நீக்கி நட்புடன் வாழ்வோம். முருகா! முருகா! என்றே முருகன் அருள்பெற கூவுவோம். முருகனருளால் பகை நீங்கி நட்புறவான வாழ்வை வாழ்வோம்.

-மகான் ஆறுமுக அரங்கமகாதேசிகர் சுவாமிகள்
ஆதி அகத்தியர் சன்மார்க்க சங்கம்




Related Articles

2000 வருடங்களுக்கு முன் தமிழ்ச்சித்தர்கள் வகுத்த உயிரியல் (Biology)

Nathan Surya
http://thamilsiddhas.blogspot.co.uk/2017/05/biology.html





Posted By Nathan Surya

No comments:

Post a Comment