Sunday, November 18, 2018

தமிழ்ச்சித்தர்கள் வகுத்த உயிரியல் (Biology)


2000 வருடங்களுக்கு முன் தமிழ்ச்சித்தர்கள் வகுத்த உயிரியல் (Biology)

* ஒரு நாளைக்கு எத்தனை தடவை நீங்கள்
சுவாசிக்கின்றீர்கள்?
*உடலிலுள்ள நரம்பு, நாடிகள் எத்தனை?
*ஆண், பெண், அலியாவது ஏன்?
*சித்தர்கள் வகுத்த உறுப்புகளும் நோய்களும்
* உலகில் எத்தனை இலட்ச தோற்றபேத ஜீவராசிகள் உண்டு?
*சிதம்பர இரகசியம் என்றால் என்ன?

இயற்கையின் செயல்பாடுகள்


ஆண் பெண் சேர்க்கையால், உயிரும், உடம்பும் சுக்கில சுரோணிதம் என்ற திரவப்பொருள் சேர்ந்து கரு கூடுகிறது(ஆண்பால் உள்ள சுக்கிலமும், பெண்பால் உள்ள சுரோணிதமும் ஆக இரண்டுமே பஞ்சபூதங்களின் சாரமாகும்). பின்பு 10 மாதம் தீட்டு வெளியாகாமல் கரு வளர்கிறது. பின் குழந்தை பிறக்கிறது. குழந்தை மென்மையும் சற்றுத் திடப்பொருளாகவும் இருக்கும். பிறகு வளரவளர மென்மையும் திடப்பொருளாகவும் வளர்கிறது. பிறகு நாளுக்கு நாள், பாலர் பருவம், வாலிபம், முதுமையுமாக பரிணாம வளர்ச்சிக்கு உட்பட்டு நரை, திரை வரும். உடம்பு தளர்ந்து போகும். உடம்பை விட்டு ஆன்மா பிரிந்துவிடும். உயிர் தோன்றும்போது உடம்பும் உயிருமான சுக்கில, சுரோணிதமாகிய திரவப்பொருளாக இருந்த இந்த உடம்பு, திடப்பொருளாக மாறி இறந்துபோகிறது. இது மிக நுட்பமான இயற்கையின் செயல்பாடாகும்.

பரிணாம வளர்ச்சியும் அதன் இயல்பும்


சடப்பொருள் நீங்கலாக மற்ற எல்லா சீவராசிகளும் அதனதன் அமைப்பின்படி பரிணாம வளர்ச்சிக்குட் பட்டிருக்கும். இதை உண்மைப்பொருள் அறிந்தவர்கள் தவிர வேறு யாராலும் தடுக்க முடியாது. அதன் போக்கில்தான் சென்று சாகவேண்டும். ஆனால் மனிதன் மட்டும் தடுக்கவும் வெல்லவும் முடியும்.

ஊர்வ பதினொன்றாம் ஒன்பது மானுடம்
நீர்பறவை நாற் காலோர் பப்பத்துச் - சீரிய
பந்தமாந் தேவர் பதினா லயன்படைத்த
அந்தமில் சீர்த்தாவரநா லைந்து.

ஊர்வன : 11
மானுடம் : 9
நீர் :10
பறவை :10
நாற்காலோர் :10
தேவர் :14
தாவரம்(4*5) : 20
******************
மொத்தம் = 84
******************

ஆக 84 இலட்ச தோற்றபேத ஜீவராசிகளாகும். மேற்கண்ட பாடலில் 7 வகை தோற்றத்தைப்பற்றி உள்ளது. இந்த ஜீவராசிகள் நான்குவகை யோனி வாயிலாக தோன்றும். குறிப்பாக கருப்பை முட்டை மற்றும் வெப்பம், வியர்வைகளால் தோன்றும்.தரையில் ஊர்ந்து செல்வது 11 லட்சம் தோற்றபேதங்கள் உதாரணமாக பாம்பு, பல்லி, தேள், நட்டுவாக்கிளி, புழு போன்றவைகள். மானுடம் 9 லட்சத் தோற்ற பேதமுடைய மனிதர்கள். நீர்வாழ் ஜீவராசிகள் பத்துலட்ச தோற்ற பேதமுடையவைகள். உதாரணமாக மீன், திமிங்கலம், முதலை, தவளை போன்றவை. பறவை இனங்கள் 10 லட்ச தோற்ற பேதமுடையவை. உதாரணமாக புறா, காகம், கிளி போன்றவை. நாற்காலோர்(நான்கு காலுடைய ஜீவராசிகள்) பத்து லட்ச தோற்ற பேதங்கள். உதாரணமாக யானை, குதிரை, மான் போன்றவை.

நமது கண்களுக்குப் புலப்படாத 14 லட்சம் தேவர்கள் இருக்கிறார்கள். தாவரங்கள் மட்டும் 20 லட்சம் தோற்ற பேதங்கள் கொண்டவை. மனிதர்கள் உட்பட மற்ற எல்லா ஜீவராசிகளும் உயிர்வாழ இயற்கை கொடுத்தது. புல், செடி, கொடி, மரம் நான்குதான். புல் வகை என்பது குறுகிய கால பலன் தரக்கூடிய கம்பு, நெல், கேழ்வரகு, சோளம் போன்றவை. செடி என்பது மிளகாய், தக்காளி, கொத்தவரைக்காய், வெண்டைக்காய், கத்தரிக்காய் போன்றவை. கொடி வகைகள் : அவரைக்காய், புடலங்காய், பீக்கங்காய், சுரக்காய், பூசணிக்காய், பரங்கிக்காய் மற்றும் சில கொடி வகை மூலிகைகளும், வேலிப்பருத்தி முதல் உண்டு. மரம் : மா, தென்னை, பனை ஆகிய கணக்கில் அடங்கா வகைகள்.

குறிப்பு :

மனிதனுக்கும் மற்றும் எல்லா ஜீவராசிகளுக்கும் பசி இயற்கையே. அதனதன் உடல் இயல்புக்கேற்ப உணவும் இயற்கையே, அதை உண்ணுவதும் இயற்கையே, அதை உண்டபின் ஜீரணமாகக்கூடிய இயல்பும் இயற்கையே. உணவில் உள்ள சத் அசத்தை பிரித்து, அசத்சை நீக்கி, சத்தை மனிதனுக்கு 72 ஆயிரம் நாடி நரம்புகளையும் உரமேற்றுவதும் இயற்கையே. பின்பு அதன் காரணமாக மனம், புத்தி, சித்தம், அகங்காரம் ஆகிய அந்த கரணங்களும் இயற்கையே. மெய், வாய், கண், மூக்கு, செவி, என்று சொல்லப்பட்ட பொறிபுலன்கள் அடங்கிய தத்துவம் 96ம் இயற்கையின் செயல்பாடுகளே. நாம் நமக்கு பசி வந்ததாகவோ, நாம் உண்ணுவதாகவோ நினைக்ககூடாது. பசியும் இயற்கையே, நாம் உண்ணுவதும் இயற்கையே, அறுசுவையும் இயற்கையே, உறங்குவதும் இயற்கையே, உறங்கி விழிப்பதும் இயற்கையே, உடல் இன்பமும் இயற்கையே, கரு கூடி பின் குழந்தை ஆவதும் இயற்கையே. ஆக அனைத்தும் இயற்கையின் செயல்பாடாகும்.

தமிழ்ச் சித்தர்கள் கண்டுபிடித்த ஆமை அதிசயம்!


ஒருமையுள் மை போல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப் புடத்து
-திருக்குறள் 126-

ஒரு பிறவியில் ஒருவன் ஆமை போல் ஐம்பொறிகளயும் அடக்கி வாழக் கற்றுக் கொண்டால் அந்த அடக்கம் அவன் எடுக்கும் ஏழு பிறவிகளுக்கும் பாதுகாவலாக அமையும் என்பது திருவள்ளுவரின் கூற்றாகும்.

ஆனால் திருமூலர் மட்டுமே ஆமையையும் ஆயுள் நீட்டிப்பையும் இணைத்துப் பேசுகிறார். இதை இன்றைய உயிரியல் விஞ்ஞானமும் கின்னஸ் சாதனை நூலும் உறுதிப்படுத்தி விட்டன.

ஆமை தன் உறுப்புகளை ஓட்டுக்குள் இழுத்துப் பாதுகாப்பது போல ஒருவன் ஐந்து புலன்களயும் உள்ளுக்குள் இழுத்து ஒடுக்கி விட்டால் ஆன்ம ஒளி பிறக்கும் என்று கூறி விடலாம். ஆனால் திருமந்திரம் இதற்கு மேலாக ஒரு படி செல்கிறது.

இன்றைய உயிரியல்(Biology) படித்தோருக்கு உலகிலேயே நீண்ட நாள் வாழும் பிராணி ஆமை தான் என்று தெரியும். இதை கின்னஸ் சாதனை நூலிலும் காணலாம்.


இதையே திருமூலரும் கூறுகிறார்:-

ஊமைக் கிணற்றகத்துள்ளே உறைவதோர்
ஆமையின் உள்ளே யழுவைகள் ஐந்துள
வாய்மையினுள்ளே வழுவா தொடுங்குமேல்
ஆமையின் மேலுமோ ராயிரத் தாண்டே
-திருமந்திரம் 2264, 2304-

மரணம் இலாப் பெருவாழ்வு வாழ வேண்டுமானால் - ஆமையை விட ஆயிரம் ஆண்டு கூடுதலாக வாழ வேண்டுமானால் - என்ன செய்ய வேண்டும் என்று கூறுகிறார்:

வாயில்லாக் கிணற்றுள் உறையும் பிரணவ வழிபாட்டாளரிடம் உறைப்புடன் தங்கும் நின்மல சாக்கிரம் முதலிய 5 நிலைகள் உண்டு. அந்நிலையில் ஆன்ம ஒளியில் நழுவா அறிவு ஒடுங்குமேல் அவர் பிரணவ உடலுடன் மேலும் ஒரு ஆயிரம் ஆண்டு உயிர் வாழலாம்.

இதிலுள்ள தத்துவ விஷயங்களை மறந்து விட்டு ஆமையை விட ஆயிரம் ஆண்டு உயிர் வாழ்வது எப்படி என்ற வரிகளை மட்டும் கவனிக்கவும். ஆமை தான் உலகில் நீண்ட காலம் வாழும் பிராணி என்பதைத் தமிழர்கள் அறிந்திருந்தனர்.

மனிதனைப் போல மூன்று மடங்கு ஆயுள் உடையது ஆமை. இதைக் கண்டுபிடித்து எழுதி வைக்கக் கூட ஒருவர் பல தலைமுறைகளுக்கு வாழ்ந்திருக்க வேண்டும். அல்லது சரியான தகவலைப் பரப்பும் உத்தி இருந்திருக்க வேண்டும். திருமூலர் 3000 ஆண்டு வாழ்ந்ததாக ஒரு நம்பிக்கையும் உண்டு.

நீண்ட நாள் வாழ்வது எப்படி?


ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசிக்கிறான் (மேலை நாட்டுக் கணக்குப் படி ஒரு நிமிடத்திற்கு 18 முறை). இந்தக் கணக்குப் படி ஒரு மணிக்கு 900 முறை. ஒரு நாளைக்கு 21,600 முறை சுவாசிக்கிறான். இந்த சுவாசத்தை எவ்வளவுக்கு எவ்வளவு குறைக்கிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு ஆயுள் கூடும்!

எவ்வளவுக்கு எவ்வளவு கூடுதலாகச் செலவழிக்கிறோமோ, அந்த அளவுக்கு ஆயுள் குறையும். இது ஒரு பாங்கில் பணம் சேமிப்பது போல. பாங்கிலுள்ள பணத்தை விரைவில் செலவழித்தால் என்ன ஆகுமோ அதைப் போலத் தான் உயிர் வாழும் ஆண்டுகளும்.

இந்தத் தத்துவத்தைத் திருமூலர் பாடலிலும் ''கோயில்'' என்ற சொல்லால் பிரபலமான தில்லைச் சிதம்பரத்திலும் காணலாம். சிதம்பரம் கோவிலில் 72,000 ஆணிகள் அறையப் பட்ட 21,600 பொன் தகடுகள் இருந்ததாக அல்லது இருப்பதாகச் சொல்வர். 64 விதமான மரத்தாலான வேலைப்பாடுகளைப் பார்க்கலாம். ஆங்கிலத்தில் "beam" என்று சொல்லப் படும் இவை 64 கலைகளைக் குறிக்கும். 21,600 தங்க ஓடுகள் ஒரு மனிதன் ஒரு நாளில் விடும் 21,600 மூச்சுக் காற்றைக் குறிக்கும். 72,000 ஆணிகள் நம் உடலில் உள்ள நாடி, நரம்புகளையும் நாடித்துடிப்பையும் குறிக்கும்.

திருமூலர் தனது பாடலில்:-

விளங்கிடு முந்நூற்று முப்பத்தோ டொருபான்
தனங்கொளிரட்டிய தாறு நடந்தால்
வணங்கிடு ஆமைம்மலம் வாயுவெழுந்து
விளங்கிடு மவ்வழி தத்துவ நின்றே

விளக்கமிக்க முந்நூறும், முப்பதைப் பத்தினால் பெருக்கிக் கிடைத்த முந்நூறும் சேர்ந்து அறுநூறு ஆகும். இரட்டியதாறு என்பது ஆறும் ஆறும் பெருக்க முப்பத்தாறு ஆகும். இம்முப்பத்தாறை அறுநூறோடு பெருக்க 21,600 ஆகும். இதுவே ஒருநாள் நாம் சுவாசிக்கும் சுவாசங்கள்.

ஆனால் வரவு 7200 சுவாசம் தான். பாக்கி 14,400. இது தான் நம் மொத்த ஆயுளிலிருந்து கழிந்து கொண்டே வரும். இதைத் தடுக்க மூச்சுப் பயிற்சி செய்ய வேண்டும். பிராணாயாமம் (மூச்சுப் பயிற்சி) செய்தால் ஆயுள் விருத்தியாகும்.

ஒரு சுவையான கணக்கைப் பாருங்கள். ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசித்தால் அவனுக்கு விதித்த ஆண்டு 100.

ஒரு நிமிடத்திற்கு ஒரு மனிதன்

18 முறை சுவாசித்தால் அவன் வயது 83 1/3 ஆண்டுகள்
2 முறை சுவாசித்தால் அவன் வயது 750 ஆண்டு
1 முறை சுவாசித்தால் அவன் வயது 1500 ஆண்டு
0 முறை சுவாசித்தால் முடிவேயில்லை

(இது சித்தர்களால் மட்டுமே முடியும்)

ஆமை ஒரு நிமிடத்திற்கு மூன்று முறை தான் சுவாசிக்கிறதாம். ஆயினும் அதற்குப் புற பத்துகள் அதிகம்.

ஒரு மனிதன் ஓம்காரம் சொன்னால் அவனுடய சுவாசத்தின் நீளம் குறைந்து சுவாசம் மிச்சப் படுகிறதாம். ஆகையால் பிரணவ மந்திர (ஓம்) ரகசியம் அறிந்தவர்களும் நீண்ட நாள் வாழலாம்.

சித்தர்கள் வகுத்த உறுப்புகளும் நோய்களும்

சித்தர்கள் கண்டறிந்த நோய்கள் 4448. அவை, உடல் முழுவதும் தோன்றுவதாகும். உடலிலுள்ள உறுப்புகள் சிலவற்றில் இந்த நோய்கள் உண்டாகுமென்றும், நோய் உண்டாகும் உறுப்புகளாகப் பத்தொன்பதைக் கூறி, அவை ஒவ்வொன்றிலும் தோன்றக் கூடிய நோய்களின் எண்ணிக்கை பிரித்துக் கூறப்படுகிறது.

1. தலை 307

2. வாய் 18

3. மூக்கு 27

4. காது 56

5. கண் 96

6. பிடரி 10

7. கன்னம் 32

8. கண்டம் 6

9. உந்தி 108

10. கைகடம் 130

11. குதம் 101

12. தொடை 91

13. முழங்கால் கெண்டை 47

14. இடை 105

15. இதயம் 106

16. முதுகு 52

17. உள்ளங்கால் 31

18. புறங்கால் 25

19. உடல்உறுப்பு எங்கும் 3100


ஆக 4448 என்பனவாகும். இவ்வாறு உறுப்புகள் தோறும் உண்டாகும் நோயின் எண்ணிக்கையைப் பிரித்துத் தொகைப்படுத்திக் கூறியிருப்பது, சித்த மருத்துவத்தின் தொன்மை, வளர்ச்சி ஆகிய இரண்டையும் காட்டுவதாகக் கொள்ளலாம்.

உலக மருத்துவம், இவ்வாறு நோய்களைத் தொகையாக்கிக் கூறுவது இல்லை என்பது கருதுதற்குரியது.

கிருமிகளினால் உண்டாகும் நோய்கள்

குடலில் உருவாகும் பூச்சிகள் நோய்களை உண்டாக்கும் கிருமிகள் என்று குறிப்பிடப் படுகின்றன. அவை, குடலில் உண்டாகும் நோய்களின் மூலமாகவும், கெட்ட உணவுகளின் மூலமாகவும் உண்டாகும். அவை, பூ நாகம், தட்டைப்புழு, கொக்கிப்புழு, சன்னப்புழு, வெள்ளைப் புழு, செம்பைப் புழு, கீரைப்புழு, கர்ப்பப் புழு, திமிர்ப்பூச்சி எனப் பலவாகும். இவை துர்நாற்றமடைந்த மலத்தினாலும், சிறுநீர், இரத்தம், விந்து, சீழ், சளி, வியர்வை ஆகியவற்றிலும் உற்பத்தியாகும்.

கிருமிகளால் உண்டாகும் நோய்க்குறி குணங்கள்

குடலில் உண்டாகும் கிருமிகளினால் உடல் நிலை பாதிக்கப்பட்டு, அதன் விளைவாக நோய்க்குரிய குணங்கள் புறத்தே தோன்றுமாறு குணங்களை ஏற்படுத்தும். அவை, உடல் நிறம் மாறும். சுரம், வயிற்றுவலி, மார்பு நோய், வெளுப்பு நோய், ஊதல் நோய், இருமல், வாந்தி, சயநோய், அருசி, அசீரணம், பேதி, வாய் நீரூறல், பிரேமை, சூலை, தொப்புள் சுற்றி வலி, வயிறு உப்பல், தூக்கத்தில் பல் கடித்தல், மாலைக்கண், குழந்தைகளுக்குத் தெற்கத்திக் கணை, குழந்தை இசிவு, மூக்கில் புண் ஆகிய குணங்களை விளைவிக்கும்.

குடற் கிருமிகளினால் கிராணி, பவுத்திரம், மூலம், மலக்கட்டு, தேகக் காங்கை, சுரம், மயிர் உதிர்தல், குட்டம், சொறி சிரங்கு, படை, கரப்பான் முதலிய நோய்களை உண்டாக்கும் என்று, கிருமிகளினால் உண்டாகக் கூடிய உடல் பாதிப்பு விரித்துரைக்கப்படுகிறது.

கிருமிகள் உருவாகக் காரணம்

கரப்பான், கிராணி, பவுத்திரம், மூலம், மலக்கட்டு, தேகக் காங்கை முதலிய நோய்கள் உண்டாகும் வழிகளை ஆராய்ந்தால், அவை, உடலின் சூட்டினாலேயே உருவானவை எனத் தெரியும்.அதிகமான உடலுறவின் காரணத்தினால் உடல் சூடுண்டாகி, அச்சூடு கொழுப்பு, தசை யாவற்றையும் தாக்கி, கிருமிகளை உண்டாக்கும். அக்கிருமிகள் உடலைத் துளைத்துக் கொண்டு எங்கும் பரவி விஷ கரப்பான் என்னும் நோயை உண்டாக்கித் தினவை விளைவிக்கும்.

அதே மாதிரியான உடற்சூடு மலத்தைத் தீய்த்து, கட்டுண்டாக்கித் துர்நாற்றமுண்டாக்கும். மலம்அழுகிக் கிருமிகளை உண்டாக்கும். அவை குடலுக்குள், உண்ணும் உணவை உண்டு வளர்ந்து குட்டம், வெடிப்புண்,சொறி, கரப்பான், கிராணி, பவுத்திரம், சுக்கிலப் பிரமேகம் போன்ற நோய்களை உருவாக்கும். மேலும் குடற்புழுக்களால் மலத்துவாரத்தில் இரத்தம், சீழ், நீர்க் கசிவு, முளைமூலம், வயிறு பொருமல், வாய்வு, புழுக்கடி, சோகை, குன்மம், சயநோய், மலடு, பெருவயிறு, சுக்கில நட்டம், உடல் தடிப்பு போன்ற நோய்களும் உண்டாகும்.

நோய்க் கிருமிகளால் உடலுக்கு நேரக் கூடிய விளைவுகளை விவரித்துள்ளது, நோய் வரும் வழிகளை யெல்லாம் கண்டறிந்ததின் விளைவாகவே எனலாம். எவையெவை நோயைத் தரவும், உண்டாக்கவும் வல்லவை என்பதை உணர்ந்து உணர்த்தினால் மட்டுமே நோயிலிருந்து விலகவும், நோயிலிருந்து உடலைப் பாதுகாத்துக் கொள்ளவும் இயலும் என்பதை அறிந்தே சித்த மருத்துவத்தின் செயல்பாடுகள் அமைந்திருக்கின்றன எனல் பொருந்தும்.

கண் நோய் :

கண் மருத்துவம் என்பது இன்றைய காலத்தில் சிறந்த இடத்தைப் பிடிப்பதைப் போலவே, தமிழ் மருத்துவ நூலாரும் கண் மருத்துவத்தைச் சிறந்த மருத்துவமாக வளர்த்தனர் எனலாம்.

பொதுக் காரணங்கள் :

வேகங்களின் வழியே உண்டாகும் தீவினையாகிய நோய்களையும், வெம்மையால் உண்டாகும் எரிச்சலையும், புவன போகங்களின் மேல் கொண்ட பெருத்த ஆர்வத்தால் உண்டான பற்பல நோய்களும், அதனால் மெய்யிலும், உள்ளத்திலும் ஏற்படும் தளர்ச்சிகளும், உலக வாழ்க்கை என்று கூறப்படும் இருநூறு துக்க சாகரங்களும் கண்நோய் உண்டாவதற்கான பொதுக் காரணங்கள் என்றும், மனிதன் பிறந்தபோதே உடன்தோன்றி வருத்துகின்ற வேகம் என்னும் பதினான்கு நோய்களும் குறிப்பால் உணர்த்தப் பட்டுள்ளன. அவை : சுவாசம், விக்கல், தும்மல், இருமல், கொட்டாவி, பசி, தாகம், சிறுநீர், மலம், இளைப்பு, கண்ணீர், விந்து, தூக்கம், கீழ்நோக்கிச் செல்லும் வாயு (அபான வாயு என்பர் சிலர்). பொதுவாக ஆராய்ந்தால் மேற்கண்ட பதினான்கும் உடலில் தோன்றும் எல்லா நோய்களுக்கும் அடிப்படையாக உள்ளன என்பது தெளிவாகும். அவை இல்லா மனிதன் தேவனெனப் படுவான்.

சிறப்புக் காரணம் :

சிசுவானது தாயின் கர்ப்பத்தில் இருக்கும் போது, தாயின் வயிற்றில் கிருமிகள் சேர்ந்திருந்தாலும், தாயானவள் பசியால் வருந்தினாலும், தாயானவள் திகிலடைந்தாலும், மாங்காய், மாம்பழம் இவற்றை விரும்பித் தின்றாலும் சிசு பிறந்தவுடன் சிசுவின் கண்களில் நோய்கள் உண்டாகும்.

காசநோய் :

கண்ணில் உண்டாகும் காசநோய், நீலகாசம், பித்தகாசம், வாதகாசம், வாலகாசம், மந்தாரகாசம், ஐயகாசம், வலியுங்காசம், விரணகாசம் என எட்டாகும்.

வெள்ளெழுத்து

கண்பார்வை மயக்கம் என்று கூறப்படும் ‘திமிரம்’ ஏழாகும். அவை வெள்ளெழுத்து, மந்தாரம், மூளை வரட்சி, பித்தம், சேற்பம், நீர் வாயு, மேகம் என்பன.

முப்பத்தேழு வயது வரை கண் பார்வை தெளிவாகத் தீங்கின்றி இருக்கும். நாற்பத்தைந்தில் கண்பார்வை சற்று இயற்கைக்கு ஒதுங்கியும், தெளிவின்றி சற்றுப் புகைச்சலாய்த் தோன்றும். ஐம்பத்தேழாம் வயதிலிருந்து சிறிது சிறிதாகக் கண்பார்வை இருளத் தொடங்கும். கண்பார்வை அறவே நீங்கி இருண்டிடும் நூறாமாண்டில். கூர்மையான பார்வை தரத்தக்க கருவிழியில் அடர்ந்த புகை கப்பியது போலவும், மேகக் கூட்டம் போலவும், பார்வை தடைப்பட்டு, நேராய்க் காணத்தக்க பொருள் சற்று ஒதுங்கிக் காணப்பட்டாலும், பொருள்கள் சற்று மஞ்சளாகவும் நேர்ப்பார்வை சற்று தப்பியும் காணும். இத்தகைய குறிகள் கண்ணில் தோன்றினால் அதனை வெள்ளெழுத்து (திமிரம்) என்று அறியவும். கண்பார்வை வயது ஏறயேறக் குறைவதின் விவரத்தைக் குறிப்பதுடன், பார்வைத் திறன் ஒடுங்குவது இயற்கை என்பதையும் இக்கருத்து விவரிக்கிறது.

கண்ணின் நோய்களைக் குறிப்பிட்டு அதன் தோற்றத்தையும் வண்ணத்தையும் குறிப்பிட்டுக் காட்டியிருப்பது மருத்துவ நூலாரின் ஆழ்ந்த மருத்துவப் புலமை நன்கு விளங்கக் கூடியதாக இருக்கிற தெனலாம்.

தலைநோய் :

உடம்பு எண் சாண் அளவு, அவ்வுடம்பில் உண்டாகும் நோய்கள் 4448, அவற்றில் தலையில் தோன்றும் நோய்கள் 1008 என்று குறிப்பிடுவர். ஒவ்வொரு உறுப்பிலும் உண்டாகும் நோய்கள் என்று குறிப்பிடும் அங்காதி பாதம், தலையின் உறுப்புகளாகக் கொண்ட கபாலம் வாய், மூக்கு, காது, கண், பிடரி, கன்னம், கண்டம் ஆகிய எட்டுப் பகுதிகளில் வரும் நோய்கள் மொத்தம் 552 என்கிறது. ஆனால், தலை நோயைக் குறிப்பிடும் நாகமுனிவர் 1008 என்கிறார். இதனால் நாக முனிவர் தலைநோய் மருத்துவத்தில் கொண்டிருந்த ஆழ்ந்த ஈடுபாடும், ஆய்வும் புலப்படும். மேலும், அம்முனிவர் எண்ணூற்று நாற்பத்தேழு நோய்களைத் தன்னுடைய அனுபவத்தினால் உணர்ந்ததாகக் கூறுவதும் குறிப்பிடத்தக்கது.

தலை உறுப்புகளில் உண்டாகும் நோய்களின் எண்ணிக்கை

ஒவ்வொரு உறுப்பிலும் எத்தனை நோய்கள் உண்டாகும் என்ற குறிப்பினைத் தருகின்றபோது, தலையின் உச்சியில் நாற்பத்தாறு மூளையில் (அமிர்த்தத்தில்) பதினாறு, காதில் நூறு, நாசியில் எண்பத்தாறு, அலகில் முப்பத்தாறு, கன்னத்தில் நாற்பத் தொன்பது, ஈறில் முப்பத்தேழு, பல்லில் நாற்பத்தைந்து, நாக்கில் முப்பது நான்கு, உண்ணாக்கில் இருபது, இதழில் பதினாறு,நெற்றியில் இருபத்தாறு, கண்டத்தில் நூறு, பிடரியில் எண்பத் தெட்டு,புருவத்தில் பதினாறு, கழுத்தில் முப்பத்தாறு, என, தாம் அனுபவத்தினால் உணர்ந்தவற்றை மட்டும் குறிப்பிடு கின்றார். ஆனால், எந்த முறையைக் கொண்டு 1008 என்ற எண்ணின் தொகையைக் கூறினார் என்பது குறிப்பிடப் படவில்லை.

கபால நோயின் வகை :

வாதம் முதலாகக் கொண்ட முக்குற்றங்களினால் வரும் நோய்கள்10, கபாலத் தேரை1, கபாலக் கரப்பான் 6, கபாலக் குட்டம் 5, கபாலப் பிளவை 10, கபாலத் திமிர்ப்பு2, கபாலக் கிருமி2, கபாலக் கணப்பு3, கபால வலி1, கபாலக் குத்து1, கபால வறட்சி1, கபால சூலை3, கபால தோடம்1 ஆக 46–ம் உச்சியில் தோன்றும் வகையாகக் குறிப்பிடுவர்.

தலையில் தோன்றும் நோய்களில் கண், காது, தொண்டை, மூக்கு, ஆகியவையும் அடங்கும். தற்காலத்தில் கண் மருத்துவம் எனத் தனியாகவும், காது, தொண்டை, மூக்கு ஆகியவை தனியாகவும், மூளை மருத்துவம் தனியாகவும்–சிறப்பு மருத்துவமாகவும் கொள்ளப் படுகின்றன. ஆனால் சித்த மருத்தவம் அனைத்தையும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை என்பதால் தனித்தனியே கருதாமல் ஒன்றாகவே கருதியிருக்கக் கூடும். அறிவியல் வளர்ச்சி என்பது தலைக்காட்டாத காலத்திலேயே அறிவியல் முறைக்கு உகந்ததாகச் சித்த மருத்துவத்தை வளர்த்தனர். மூளையில் உருவாகும் குற்றங்களைக் கண்டறிந்து அவை பதினாறு வகை நோயென உரைத்திருப்பது கருதுதற்குரியதாகும்.

அம்மை நோய் :

அம்மை நோய் என்னும் இந்நோயை வைசூரி நோய் என்று சித்த மருத்துவம் குறிப்பிடுகிறது. இந்நோய் வருவதற்குக் காரணமாக அமைவது வெப்பமாம். இதனை வெக்கை நோய் என்றும் குறிப்பிடக் காணலாம்.

மேலும், அம்மை நோய்க்குக் குரு நோய், போடகம் என்னும் பெயர்களும் வழங்கப்படுகின்றன.

அம்மைநோய், உடலில் ஏற்படுகின்ற அழலின் காரணத்தினால் உடலில் சூடு உண்டாகி, மூளை கொதிப்படைந்து, எலும்பைத் துளைத்துக் கொண்டு உண்டாகின்றது என்று மருத்துவ நூல் குறிப்பிடுகிறது.

இந்திய மருத்துவ வரலாற்றில் பெரும்பாதிப்பை உருவாக்கியது பெரியம்மை என்னும் வைசூரி நோய். இந்நோய் உயிர்க்கொல்லி நோயாக இருந்தது.

அம்மை நோயால் கண்கள் பாதிப்படையும். தோலில் பள்ளங் களைக் கொண்ட புள்ளிகளை ஏற்படுத்தும். அப்புள்ளிகள் என்றும் மாறாமல் இருப்பதுண்டு.

சித்த மருத்துவம் கண்டறிந்த அம்மை நோய்கள் பதினான்கு. அவை,

1. பனை முகரி 2. பாலம்மை

3. மிளகம்மை 4. வரகுதரியம்மை

5. கல்லுதரியம்மை 6. உப்புதரியம்மை

7. கடுகம்மை 8. கடும்பனிச்சையம்மை

9. வெந்தயவம்மை 10. பாசிப்பயறம்மை

11. கொள்ளம்மை 12. விச்சிரிப்பு அம்மை

13. நீர்கொள்ளுவன் அம்மை 14. தவளை அம்மை

என்பனவாகும். இந்நோய்ப் பெயர்கள் அனைத்தும் அம்மைப் புள்ளிகள் தோன்றுவதைக் கொண்டும், அம்மை நோயுற்றவரின் செயலைக் கொண்டும் காரணப் பெயரால் சுட்டப்படுகின்றன. இந்நோய் பெரும்பாலும் குழந்தைகளுக்கு வரும் நோயாகவே கருதப்படும். அதுவும் கோடைக் காலமான வேனிற் காலத்திலேயே வரும்.

ஆண், பெண், அலியாவது ஏன்?

"பாய்கின்ற வாயு குறையிற் குறளாகும்
பாய்கின்ற வாயு இளைக்கின் முடமாகும்
பாய்கின்ற வாயு நடுப்படின் கூனாகும்
பாய்கின்ற வாயு மாதர்க்கில்லை பார்க்கிலே"
(திருமந்திரம் 480)

ஆணின் உடலிருந்து விந்து வெளிப்படும்போது அவனது வலது நாசியில் சுவாசம் ஓடினால் ஆண் குழந்தை தரிக்கும். இடது நாசியில் ஓடினால் பெண் குழந்தை பிறக்கும். ஆனால் இரு நாசிகளிலும் இணைந்து சுழுமுனை சுவாசம் ஓடினால் கருவுரும் குழந்தை அலியாகப் பிறக்கும் என மூலர் கீழ்வரும் வரிகளில் விவரிக்கிறார்.

குழவியும் ஆணாம் வலத்தது ஆகில்
குழவியும் பெண்ணாம் இடத்து ஆகில்
குழவியும் இரண்டாம் அபானன் எதிர்க்கில்
குழவியும் அலியாகும் கொண்டகால் ஒக்கிலே
(திருமந்திரம் 482)

அது சரி, ஒரு சிலருக்கு வழக்கத்திற்கு மாறாக ஒன்றுக்கு மேலாக ஒரே சமயத்தில் பிறப்பதேன்? அதற்கும் திருமூலர் பதில் கூறுகிறார். விந்து வெளிப்படும்போது அபானவாயு அதனை எதிர்க்குமானால் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் தரித்துப்பிறக்கும்.

கருத்தரித்து விட்டது, நமக்கும் ஒரு குழந்தை பிறக்கப்போகிறது என பல எதிர்ப்பார்ப்புடன் இருக்கும் தம்பதியினருக்கு அதிர்ச்சி தரும் கருச்சிதைவு ஏற்படுவது ஏன்? உடல் உறவின் போது ஆண்-பெண் இருவரின் சுவாசமும் நாடித் துடிப்பும் இயல்பாக இல்லாமல் தாறுமாறாக இருந்தால் கருச்சிதைவு ஏற்படும் என்கிறார் திருமூலர்.

கொண்டநல் வாயு இருவர்க்கும் ஒத்தேறில்
கொண்ட குழவியும் மோமள மாயிடும்
கொண்டநல் வாயு இருவர்க்கும் குழறிடில்
கொண்டதும் இல்லையாம் கோல்வளை யாட்கே

மூளை வளர்ச்சி குன்றிய குழந்தை பிறப்பதற்குக் காரணம், உடலுறவு கொள்ளும்போது பெண்ணின் வயிற்றில் மலம் மிகுந்திருத்தலே காரணம் என்கிறார் திருமூலர். மேலும் உடலுறவு கொள்ளும்போது பெண்ணின் வயிற்றில் சிறுநீர் அதிகமிருந்தால் கருத்தரிக்கும் குழந்தை ஊமையாக இருக்கும் என்கிறார். பெண்ணின் வயிற்றில் மலமும் சலமும் சேர்ந்து மிகுந்திருந்தால்குழந்தை குருடனாகவே பிறக்கும் என்றும் கூறுகிறார் மூலர். எப்படி?

"மாதா உதரம் மலமிகில் மந்தனாம்
மாதா உதரம் சலமிகில் மூங்கையாம்
மாதா உதரம் இரண்டொக்கில் கண்ணில்லை
மாதா உதரத்தில் வந்த குழவிக்கே
(திருமந்திரம் 481)

சரி, குறைகளற்ற குழந்தைகள் பிறக்க வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்? அதற்கு திருமூலர் தரும் பதில் என்ன? உடலுறவின்போது ஆணின் விந்து வெளிப்படும்போது இருவருடைய சுவாசத்தின் நீளமும் திடமும் ஒத்து இருந்தால் குறையற்ற குழந்தை கருத்தரிக்கும் என்கிறார். ஆனால் ஆணின் சுவாசத்தின் நீளம் குறைவாக இருந்தால் கருத்தரிக்கும் குழந்தை குள்ளமாக இருக்கும். ஆணின் சுவாசம் திடமின்றி வெளிப்பட்டால் தரிக்கும் குழந்தை முடமாகும் என்று கூறுகிறார். வெளிப்படும் சுவாசத்தின் நீளமும் திடமும்ஒருசேரக் குறைவாக இருந்தால் குழந்தை கூனாகப் பிறக்கும்.

100 ஆண்டு வாழ்வது எப்படி?

நாம் நூறாண்டு வாழ்வதற்கு நம் தந்தையரே காரணமாகின்றனர். எப்படி? விந்து வெளிப்பட்டதும் ஆண் விடும் சுவாசம் ஐந்து மாத்திரைக் கால அளவு நீடித்தால் தரிக்கும் குழந்தை ஆணிரம் பிறைகள் காண முடியும். ஆனால் மாத்திரை அளவு குறையக் குறைய அதற்கேற்றாற்போல் நமது ஆயுளும் குறையும் என்று பின்வரும் பாடலில் கூறுகிறார்.

பாய்ந்த பின் அஞ்சோடில் ஆயுளும் நூறாம்
பாய்ந்த பின் நாலோடில் பாரினில் எண்பதாம்
பாய்ந்திடும் வாயு பகுத்தறிந் திவ்வகை
பாய்ந்திடும் யோகிக்குப் பாய்ச்சலுமே
(-திருமந்திரம் 479)

பிறப்பு இறப்பு பற்றிய இன்னும் பல கேள்விகளுக்கும் திருமூலர் பதில் கூறுகிறார்.

தொடரும்....

அய்யன் வள்ளுவப்பெருமான் அருளிய 15 நூல்கள்

*********************************************************
தமிழ் மூவாயிரமருளிய திருமூலர்

**********************************************************

ஓம்/om/ॐ/aum/ओं /唵 = அ+உ+ம்

**********************************************************
சித்தர்கள் தந்த தமிழ்

**********************************************************
தமிழ் சித்தர் கண்ட அணுசக்தி
**********************************************************
காணொளி: தமிழ்ச்சித்தர் கண்ட வியக்க வைக்கும் மருத்துவம்
**********************************************************
காணொளி: ஓங்காரக்குடிலும் சதுரகிரியும்
**********************************************************
கடவுளின் அணுத்துகளைத் தேடும் விஞ்ஞானம்
***********************************************************

The Tamil Siddhars are 18 enlightened men and women who wrote down the causes of 4,448 different diseases and prescribed medicines. AIDS was called `Vettai Noi`. AIDS syndrome was already known to the Siddha system of medicine.

***********************************************************
Posted By Nathan Surya

Wisdom of Siddhas சித்தரியல்
Posted By Nathan Surya

No comments:

Post a Comment